கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் உயரமான புண்ணிய ஸ்தலமான காளிமலை பத்ரகாளியம்மன் கோவிலில் துர்காஷ்டமி திருவிழா 6 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி கன்னியாகுமரியிலிருந்து காளி மலைக்கு சமுத்திர கிரி ரத யாத்திரை நேற்று காலை தொடங்கியது. இதனையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருமுடி கட்டும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீர் குடங்களில் நிரப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த ரத யாத்திரையின் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு நடந்தது. விழாவுக்கு காளிமலை விழாக்குழு தலைவர் பத்மகுமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி முன்னிலை வகித்தார்.சாமிதோப்பு அன்பாலயம் குரு சிவ சந்திரன் ஆசியுரை வழங்கினார். சமுத்திர கிரி ரத யாத்திரையை கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சக்தி பீட தலைவர் சின்னதம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். . கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சமுத்திர கிரி ரத யாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், நாகர்கோவில், மீனாட்சிபுரம், வடசேரி, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை, மார்த்தாண்டம், உண்ணாமலை கடை, ஆற்றூர், சிதறால் கடையாலுமூடு, வழியாக வரும் 1-ம் தேதி பத்துகாணி காளி மலையை சென்றடைகிறது.