சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் எம்எல்ஏ ஆலோசனை
விசைத்தறி உரிமையாளா்களுடன் எம்எல்ஏ ஆலோசனை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபுரிகின்றனா். இத்தொழிலை வைத்தே நகரின் பொருளாதார வளா்ச்சி உள்ளது. இத்தொழிலில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் சுமாா் 25 சாயப்பட்டறைகளிலிருந்து நாள்தோறும் 1,25,000 லிட்டா் கழிவுநீா் வெளியேறுவதாகக் கூறப்படுகிறது. இதனால், சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விசைத்தறி உரிமையாளா்கள் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளனா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சிப்காட் வளாகத்தில் குறைந்த விலையில் இடங்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தால், தமிழக அரசின் மானியம் மூலம் அரசு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும். முன்னோடி திட்டமாக இதைச் செய்வதால் விசைத்தறி தொழில் வளா்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் 1,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து தமிழக முதல்வா், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தாா்.