குடும்பத்தின் தூணே சென்று விட்டது. எழுந்து வாங்க கதறும் மணிகண்டன் குடும்பத்தினர்
குடும்பத்தின் தூணே சென்று விட்டது. எழுந்து வாங்க கதறும் மணிகண்டன் குடும்பத்தினர். தவெக தலைவர் விஜய் பரப்புரையில் நிகழ்ந்த சோகம்.;
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த சீதாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நிலையில் 9 ம் வகுப்பு வரை மட்டுமே பயின்று கல்வியை நிறுத்தி சிறு சிறு வேலைகள் செய்து தனது தம்பி உடன் வசித்து வந்துள்ளார் . சிறு சிறு வேலைகள் செய்து வந்தவர் இறுதியாக வெள்ளகோவில் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த நிவேதிதா என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஹர்ஷப்பிரதா10, துகிலன்3 என்ற மகள் மகன் உள்ளனர். இவர் தனது தம்பிக்கும் திருமணம் செய்து வைத்து தனித்தனியே வசித்து வருகின்றனர். தீவிர விஜய் ரசிகரான இவர் நடிகர் விஜய் துவக்கிய தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியில் உறுப்பினராக இணைந்த மணிகண்டன் விஜய் பரப்புரையை நேரில் காண தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மணிகண்டன் காணவில்லை என தேடிய நிலையில் அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாக அமைந்துள்ளது. அவரது மனைவி மகள் மகனுக்கு முழு பாதுகாப்பாகவும் பொருளாதார நிலைத்தன்மையையும் வழங்கி வந்த நிலையில் அவரின் இழப்பு தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் உடலை கண்டு மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. எழுந்து வா , இனி என்ன செய்வேன் என கதறியதும், தந்தை இழந்தது அறியாத மகனின் சோகமும், அறிந்தும் ஆற்றாமையால் கண்கலங்கிய மகளையும் கண்டவர்களின் கண்களும் குளமாகி தான் போனது. நிதி உதவிகள் வழங்கினாலும் இரண்டு குழந்தைகளுடன் நிராதரவாக நிற்கும் மணிகண்டன் மனைவிக்கு அரசு பணி பெற்றுத் தர வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.