மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-09-30 15:17 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்ததாவது:- ஒன்றிய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின்(DISHA) பணியாகும். ஒன்றிய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் இந்தக்குழு செயல்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசுத் திட்டங்களை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-26-ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும், என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக கூட்டத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி பார்த்திபன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News