நீதிபதி குறித்து அவதூறு விஜய் ரசிகர் கைது!
நீதிபதி குறித்து அவதூறு விஜய் ரசிகர் கைது!;
கடந்த 27- ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு வந்தார். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்பிக்கள் சியாமளாதேவி மற்றும் விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி தேவதாஸ் மகன் ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் (38) என்பவரை சென்னை நீலாங்கரை பகுதியில் இருந்து வந்த சைபர் குற்றப்பிரிவு போலீசார் அவரை விசாரணைக்காக சூரங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்ற சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ்க்கு அருணா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய் ரசிகராக இருந்து வந்துள்ளார். அப்பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து வந்த செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் மூலம் இவர் பார்வர்ட் செய்ததாக கூறி இவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.