விவசாயிகளின் வருமானம் குறையாமல் உற்பத்தி திறன் பெருக வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டார்;

Update: 2025-10-08 06:02 GMT
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் (SEEPERS-ATMA) சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பெருவிழா, அங்கக வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆட்சியர் பேசியபோது, விவசாயிகளின் வருமானம் குறையாமல், உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல், வேளாண் உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும் என்றார். இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை வழியில் படிப்படியாக மாறி, இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து, ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், பாரம்பரிய விதை இரகங்களை ஆராய்ச்சி செய்து, புதிய இயற்கை வேளாண்மைக்கு உகந்த இரகங்களை உருவாக்கி வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்த விழாவில் மாவட்டம் முழுவதிலுமிருந்து விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். உயிர்ம வேளாண்மை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.பெரியசாமி, துணை இயக்குநர்கள் மனோரஞ்சிதம், சுந்தரராஜன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் தேரடிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News