தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேட்டி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் அருகே குழந்தை இறந்ததற்கு மருத்துவர்கள் காரணமில்லை என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேட்டி;

Update: 2025-10-10 05:13 GMT
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே ஒரு குழந்தை இறந்தது. செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தியதால் தான் குழந்தை இறந்ததாக கருதி, குழந்தையின் தந்தையும், தாத்தாவும் சேர்ந்து, இறந்த குழந்தையை பார்ப்பதற்காக அங்கு வந்த கிராம சுகாதார செவிலியர்களை தாக்கி உள்ளனர். இதை அறிந்து அங்கு சென்ற டாக்டரையும் அவர்கள் தாக்கினர். இந்த சம்பவத்துக்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் துரித நடவடிக்கை எடுத்து, டாக்டர்-செவிலியர்களை தாக்கிய 2 பேரை மருத்துவமனை பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்தனர். இதனை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது. அதேநேரம் தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததாக தவறான செய்தியும் பரவுகிறது. அதே ஊரில் வேறு சில குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுஇதுவரை அந்தக்குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இந்த விஷயத்தில் அந்த குழந்தைக்கு, நாட்டு வைத்திய முறையில் சில சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 40 நாட்கள் டாக்டர்கள் ஆலோசனை இன்றி குழந்தைக்கு அவர்களாகவே கைவைத்திய முறைப்படி (தொக்கம் எடுப்பது, மாட்டுப்பால் கொடுப்பது, புகை போடுவது) சிகிச்சை அளித்துள்ளனர். இதனாலேயே அந்த குழந்தை இறந்திருக்கிறது. பணியில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் பொருட்டு டாக்டர்களின் பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார். பேட்டியின் போது அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் திரிலோக சந்திரன், டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News