கோவை: ரோலக்ஸ் யானை பிடிக்க மூன்று கும்கிகள் – மீண்டும் களத்தில் இறங்கியதால் சின்னத்தம்பி!
மதம் பிடித்த நரசிம்மன், முத்துவுக்கு பதிலாக சின்னத்தம்பி களத்தில் – ரோலக்ஸ் யானை பிடிப்பு பணி மீண்டும் தொடக்கம்.;
கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் ‘ரோலக்ஸ்’ எனப்படும் ஆண் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ரோலக்ஸ் யானை பரமேஸ்வரன் பாளையம் அருகே வாழைத் தோட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, யானை திடீரென தாக்கி அவரை தும்பிக்கையால் கீழே தள்ளியது. அவர் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். யானையை பிடிக்கும் பணிக்காக கபில்தேவ், நரசிம்மன், முத்து எனும் மூன்று கும்கிகள் களத்தில் இருந்தன. இதில் நரசிம்மன், முத்து ஆகியவற்றுக்கு மதம் பிடித்ததால் டாப்ஸ்லிப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்குப் பதிலாக ‘சின்னத்தம்பி’ என்ற கும்கி தற்போது கம்பனூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, நேற்று இரவு முதல் ரோலக்ஸ் யானை பிடிக்கும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.