தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2025-10-23 16:01 GMT
சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றமும் இது குறித்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தின்படி குறித்த காலத்தில் தேர்தல் வழக்குகள் முடிக்கப்படாமல் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இது தேர்தலின் புனிதத்தையும், ஜனநாயக நடைமுறையும் வீழ்த்தும் வகையில் உள்ளது. அதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவை கண்டிப்புடன் பின்பற்றி தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, ‘தேர்தல் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிறப்பு அமர்வாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வழக்கை விரைந்து முடிக்கக் கோரி முறையிடலாம். மாறாக, சக நீதிபதிகளுக்கு இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Similar News