பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்
பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை (ஸ்ரீகாந்தி என்கிற காந்திமதி) நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.;
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்தார் ராமதாஸ். மேடையிலேயே இதனை வெளிப்படையாக கடுமையாக எதிர்த்தார் அன்புமணி. அப்போது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவே இல்லை. கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ஊடகங்கள் முன்பு அன்புமணியை விளாசி வருகிறார் ராமதாஸ். கட்சியில் இருவரும் மாறிமாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் அறிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அன்புமணியை அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் ராமதாஸ். இந்நிலையில், தருமபுரியில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (அக்.25) நடைபெற்றது. அக்கூட்டத்தில், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாமகவின் செயல் தலைவராக எனது மூத்த மகள் காந்திமதியை நியமித்துள்ளேன். இளைஞர் சங்க மாநிலத் தலைவராக தமிழ் குமரனை நியமிக்கிறேன். இவர் தமிழகத்துக்கே பெருமை சேர்ப்பார். நான் செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். எனக்கு அதற்கு தகுதியில்லை, அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே, அப்பொறுப்பை மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குகிறேன். ஜி.கே மணி கட்சிக்கும், மக்களுக்கும் நாளும் உழைத்தவர். சட்டப்பேரவையிலும் மக்களுக்காக குரல் கொடுத்தவர். அதனால் தான் ஓய்வறியா உழைப்பாளி என்று சொல்கிறோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நிச்சயம் அது நடக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்போம். நாம் செல்லும் இடம் தான் வெற்றி கூட்டணி. காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார் என்று தெரிவித்தார். இது குறித்து காந்திமதி பேசும்போது, இந்தப் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது. ராமதாஸின் கட்டளையை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.