இளம் பெண் பாலியல் புகார்: வேளாண்மை துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் புகார் எதிரொலியாக வேளாண்மை துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-11-12 17:55 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருபவர் அறிவழகன். இவர் ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் உதவி இயக்குனர் அறிவழகன் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோவும் வெளியானது. இதைத்தொடர்ந்து பாலியல் புகாருக்கு ஆளான வேளாண்மை துறை உதவி இயக்குனர் அறிவழகன் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சித் தலைவர் இளம் பகவத் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அறிவழகன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்தார் இதைத்தொடர்ந்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் அறிவழகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை வேளாண்மை துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வேளாண்மை துறை உதவி இயக்குனர் அறிவழகன் ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போது மது போதையில் பணியில் இருந்ததாக பணியிடை நீக்கும் செய்யப்பட்டு பின்னர் பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News