தேன் விற்பது போல் நோட்டமிட்டு கோவில்களில் திருடிய தம்பதி கைது
மூலனூர் பகுதியில் தேன் விற்பது போல் நோட்டமிட்டு கோவில்களில் திருடிய தம்பதி கைது செய்த காவல்துறையினர்;
மூலனூர் பகுதியில் உள்ள கிராம கோவில்களில் அவ்வப்போது உண்டியல் காணிக்கை, பூஜை பொருட்கள், பொருட்கள், பித்தளை தட்டுகள் திருட்டு போயின. இந்த சம்பவம் தொடர்பாக மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் திருட்டு நடந்த கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் கொம்புத்தேன் விற்பனை செய்வது போல் கிராமங்களுக்கு வரும் ஒரு ஆணும், பெண்ணும் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புது அழகாபுரியை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 46), அவருடைய மனைவி விஜயலட்சுமி (35) என்று தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.