காங்கேயம் அருகே பல லட்சம் மதிப்பிலான காலாவதி அரசு மருந்து மாத்திரைகள்
காங்கேயம் அருகே பல லட்சம் மதிப்பிலான காலாவதி அரசு மருந்து மாத்திரைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை ;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அவினாசிபாளையம் புதூரில், அர்த்தநாரிபாளையம்-காளிபாளையம் சாலையோரத்தில் இரண்டு இடத்தில் 8 மூட்டைகள் கிடந்தன. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த மூட்டைகளில் தமிழக அரசின் முத்திரை பதித்த மருந்து பாட்டில்கள், ஊசிகள், மாத்திரைகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த மருந்துகள் அனைத்தும், கடந்த பிப்ரவரி மாதமே காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த மருத்துவமனையில் இருந்து அவற்றை கொட்டி சென்றனர் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறும் போது, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், காலாவதியான மருந்து, மாத்திரைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் பொதுமக்கள், கால்நடைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காலாவதியான மருந்துகளை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்காமல், திறந்தவெளியில் கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். மக்களையும் இயற்கையும் பாதுகாக்கவேண்டிய அரசு அதிகாரிகளே ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காலாவதியான மருந்துகளை கொட்டுவது மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாவது ஒருபுறம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவது உறுதி என்கின்றனர். பல லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளை கொட்டியது யார் என மாவட்ட நிர்வாகம் உரிய நடை வேடிக்கை எடுத்து காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும் என்கின்றனர்.