தலைமலை பெருமாள் கோயில் மாயமான சிலை விவகாரம் !-கோவை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை.
நாங்கள் வழிபட்ட சிலை இது இல்லை என்றும், அந்த சிலை ஆண்டாள் கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலையை மீட்டு தர வேண்டும் என பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம்.;
தலைமலை கோயில் விளக்கு நாச்சியார் சிலை மாயமானதாக எழுந்த புகார் தொடர்பாக கோவை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மோகனூர் தாலுக்கா வடத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலைமலையில் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது.புராண கால சிறப்பு பெற்ற இக்கோயிலில் இருந்த விளக்கு நாச்சியார் எனும் ஐம்பொன் சிலை மாயமானதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக நாமக்கல் அடுத்த எருமப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் கோவை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.இதன்படி சிலை மாயமானதாக புகார் அளித்த செல்வக்குமார் மற்றும் பக்தர்கள்,இந்து சமய அறநிலையத்துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்ப்டடது. விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.விசாரணை முடிவில் அதன் விவரம் தெரியவரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், கோவை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்மங்கி, எஸ்.ஐ., ரேவதி ஆகியோர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில், செல்வகுமார் மற்றும் கோவில் பக்தர்களிடம், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, செல்வகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்.... ''தற்போது கோவிலில் உள்ள விளக்கு நாச்சியார் சிலை, பழமையான சிலை என தொல்லியல்துறை மூலம் அறிவதாக போலீசார் தெரிவித்தனர் என்று கூறினார். ஆனால், நாங்கள் வழிபட்ட சிலை இது இல்லை என்றும், அந்த சிலை ஆண்டாள் கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளோம். மேலும், அச்சிலையை மீட்டு தர வேண்டும் என பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம்,'' இவ்வாறு அவர் கூறினார்.