லாரிகளுக்கு எப்.சி. கட்டணம் உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!-மாநில லாரி சம்மளேனம் கோரிக்கை
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை வைத்துக் கொண்டு நெல், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், இவர்கள் தொழிலை விட்டே வெளியேற்றப்படும் அவலநிலைக்கு தள்ளப்படுவார்கள்.;
லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில், இரண்டு சக்கர வாகனங்கள் முதல், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும்,தகுதிச் சான்றிதழ் (எப்.சி) கட்டணத்தை உயர்த்துவது சம்மந்தமாக, கடந்த நவம்பர் 11ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த வழிகாட்டு நெறிமுறை சம்மந்தமாக ஆட்சேபனை மற்றும் பரிந்துரைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு, கனரக வாகனங்களுக்கு, எப்.சி. பெற தற்போது உள்ள கட்டணத்தைவிட பல மடங்கு உயர்த்த உத்தேசித்துள்ளது. இதில், 10 முதல், 13 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு, ரூ. 1,000, 13 முதல் 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு ரூ. 5,000 ரூபாய், 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ. 25,000 என எப்.சி., கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால்,ஓரிரு வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார். இவர்கள், பெரும்பாலும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை வைத்துக் கொண்டு நெல், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர்.இதனால், இவர்கள் தொழிலை விட்டே வெளியேற்றப்படும் அவலநிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், கொரோனா தொற்றுக்குப்பின், பல்வேறு தொழில்கள் நலிவடைந்துவிட்ட நிலையில், லாரிகளுக்கு சரியாக லோடு கிடைக்காமலும், சுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டுத் தொகை, உதிரிப் பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வுகளால், லாரித் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.இந்நிலையில், தகுதி சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படும்போது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஓரிரு வாகனங்களை வைத்திருக்கும் பெரும்பான்மையான லாரி உரிமையாளர்கள், தங்களது குடும்பங்களை காப்பாற்ற முடியாமல்,வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுவர். அதனால், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்,இந்த கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.