திருச்செங்கோட்டில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்;
ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு அரசாணை எண் 62ன் படி அகவிலை படியுடன் சேர்த்து நாள் கூலி 492 கேட்டும் தொடர்ச்சியாக 480 நாட்கள் பணி செய்தவர்களை பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தியும் இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஊராட்சி தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் டேவிட் குமார் தலைமை தாங்கினார். ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும் 480 நாள் பணி செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இது குறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் டேவிட் குமார் கூறும் போது ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.அந்த சம்பளமும் ஒழுங்காக வழங்கப் படவில்லை. அவர்களுக்கு 492 ரூபாய் நாள் ஒன்றுக்கு கூலி வழங்க வேண்டும் என்று அரசாணை இருந்தும் அவர்களுக்கு கூலி முறையாக வழங்கப்படுவதில்லை மாதம் 5000 ரூபாய் வைத்துக் கொண்டு குடும்ப செலவுகள் எல்லாம் கவனிப்பது சிரமம். அவர்களுக்கு காப்பீடு போன்ற எந்த திட்டங்களும் இல்லை எனவே இதனை கண்டித்து அவர்களுக்கு ஊதிய உயர்வு செய்யவும் 480 நாள் வேலை செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவும் கேட்டு தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தூய்மை காவலர்களின் பிரச்சனையை கனிவோடு கருத்தில் கொண்டு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவரை தொடர்ந்து தூய்மை காவலர்கள் பேசும்போது மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த தொகை குடும்பம் நடத்த போதவில்லை மேலும் அந்தத் தொகையும் தாமதப்படுத்தி தான் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை காவலர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.