பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.*;
. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோப்பூர் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தோப்பூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள தனியார் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஊருக்கும் பள்ளிக்கும் நடுவே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் நான்கு அடி உயரம் வரை தண்ணீர் இருந்ததால் வேறு வழியின்றி வன்னியம்பட்டி வழியாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மாணவ மாணவிகள் சுற்றி பள்ளிக்கு சென்றுள்ளனர். இரவு நேரத்தில் சுற்றுப்பாதையை தவிர்த்து ரயில்வே சுரங்கப்பாதை வழியாக வந்த மாணவ மாணவிகள் சிலர் விபத்தில் சிக்கி உள்ளனர். சீருடை நனைந்ததால் ஒரு சில மாணாக்கர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் நிறைந்து பாதையை அடைத்துச் சென்றுள்ளது. எனவே அந்த இடத்தில் தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகமும் ரயில்வே துறையினரும் தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுப்பதாக குற்றம் சாட்டி, இன்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புத்தகப் பைகளுடன் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாநகர் விலக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வன்னியம்பட்டி காவல்துறையினர், ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். மேலும் இதே நிலை நீடித்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.