ராமநாதபுரம் விளை நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் கடித்து விவசாயி படுகாயம்

கடலாடி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு பன்றி கடித்து விவசாயி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2025-12-15 07:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சவேரியார்பட்டனம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயசீலன்.இவர் தனது விளைநிலத்தில் நெல், மிளகாய் போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மைக்கேல் ஜெயசீலன் தனது மனைவி அமளி மற்றும் அவரது மகன்கள் ஜோசுவா, ஜெகன் ஆகியோருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென விளைநிலத்தில் புகுந்த காட்டு பன்றிகள் மைக்கேல் ஜெயசீலனை தாக்கி, கடித்து குதறியது. இதில் அவரது கால், கழுத்து, தலை, கை, முதுகு பகுதிகளில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காட்டுப்பன்றியை விரட்டி ஜெயசீலனை மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து பலமுறை விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News