கியூஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி வாலிபர் மோசடி

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு சுவீட் கடையில் கியூஆர் கோடு மூலமாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தக் கூடிய வசதி உள்ளது.;

Update: 2025-12-15 13:33 GMT
தஞ்சாவூர்: தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சுவீட் கடையில் கியூஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி வாலிபர் மோசடியில் ஈடுபட்டது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு சுவீட் கடையில் கியூஆர் கோடு மூலமாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தக் கூடிய வசதி உள்ளது. இந்த கடையில் சுவீட், கார வகைகள் வாங்கியவர்களில் சிலர் பணம் கொடுத்தனர். சிலர் தாங்கள் வாங்கிய சுவீட், கார வகைகளுக்கு கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்திவிட்டு, பணம் சென்றுவிட்டதாக தங்களது செல்போன்களுக்கு வந்த குறுஞ்செய்தியை காண்பித்துவிட்டு சென்றனர். இதை பார்த்த ஊழியர்கள் பணம் கடையின் கணக்கில் வந்து இருக்கும் என நினைத்து கொண்டிருந்தனர். மாலையில் கடை உரிமையாளர் வந்து, கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அப்போது கியூஆர் கோடு மூலம் செலுத்தப்பட்ட பணம் கடையின் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த கியூஆர் கோடுவை எடுத்து பார்த்தபோது, கடையின் கியூஆர் கோடு மீது மற்றொரு கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர், கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் கடையின் அருகே நின்று கொண்டு இருக்கிறார். பின்னர் கடையின் முன் வந்து கூல்டிரிங்ஸ் எடுக்கும்படி ஊழியரிடம் கூறுகிறார். அவர் அதை எடுப்பதற்காக திரும்பியபோது, கடையின் கியூர்ஆர் கோடு மீது தான் கொண்டு வந்த கியூஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்டுவது தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News