நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தத்தெடுத்துக் கொண்டு பராமரிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் பல்வேறு காரணிகளால் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், காற்று மாசுபாடு, புவி வெப்ப உயர்வு, மழை நீர் வீணாதல், வெள்ளம் ஏற்படுதல், பறவைகள் இருப்பிடம் இழத்தல் ஆகியவற்றால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்து வருகிறது.;
எனவே, கிராமப்புறங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்ப்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்” (GTM) மூலம் மொத்த நிலப்பரப்பளவில் சுமார் 24 சதவீதம் உள்ள காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதமாக உயர்த்துவதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 2025-2026-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் பொது இடங்கள், சாலையோரம், அரசு கட்டிட வளாகங்கள், மற்றும் கலைஞர் கனவு இல்லம் ஆகிய இடங்களில் 2,19,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்கள் மூலம் நடவு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், சுற்றி வேலிகள் அமைத்து, தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தத்தெடுத்துக் கொண்டு பராமரிக்க வேண்டும்.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் வட்டார நாற்றாங்கால்களில் உள்ள நர்சரி மூலம் 7.60 இலட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, 2026-2027-ஆம் நிதியாண்டில் நடவு செய்ய ஏதுவாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.பொது இடங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை கால்நடைகளும், சாலையோரம் நடவு செய்யப்படும் மரக்கன்றுகளை அருகில் உள்ள நில உடைமையாளர்களும் சேதப்படுத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வரப்பெற்றுள்ளது. அதிக அளவில் மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும், தங்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நடப்பட்ட மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து வளர்த்திட முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.