குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

நடவடிக்கை இல்லையெனில் குடியேறும் போராட்டம் எச்சரிக்கை விடுத்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்;

Update: 2025-12-17 10:18 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொம்பாடிபட்டி மக்களுக்கு இலவச வீட்டு பட்டா வழங்கி இடம் ஒதுக்கீடு செய்யாததையும், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தொடர் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கரூர் மாவட்ட செயலாளர் ராஜு, மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக கண்டன கோஷங்களை எழுப்பிக் கொண்டு குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் போலீசார் முன்னிலையில் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் முதல் கட்டமாக நில அளவீடு பணிகள் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகள் தெரிவித்த நாளில் பணி நடக்கவில்லையெனில் மறுநாள் 25ஆம் தேதி கொம்பாடிபட்டியில் நிலம் ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், சிபிஐஎம் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், மாவட்டத் தலைவர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் கொம்பாடிபட்டி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

Similar News