முத்துக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா!
டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர் ராமன் மற்றும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.;
முத்துக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் இளங்கோ தலைமையேற்று கொடியேற்றினார்.பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ், முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகப்பேறு மருத்துவர் நர்மதா பேசுகையில் ... ஆசிரியர்கள் பெற்றோரின் சிரமங்களை நேரடியாகக் காண்பவர்கள் என்றும், அன்றாட வாழ்க்கை போராட்டங்களுக்கிடையே குழந்தைகளை பள்ளிக்குச் அனுப்பும் பெற்றோரின் கனவுகளையும் கவலைகளையும் ஆசிரியர்கள் ஆழமாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அந்தப் புரிதலே மாணவர்களிடம் கூடுதல் அக்கறை, பொறுப்பு மற்றும் மனிதநேயத்தை உருவாக்குகிறது என்றார்.மேலும் அரசு பள்ளிகள் மேம்படுவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும்,தரமான கற்பித்தல், ஒழுக்கம், மதிப்புகள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை விதைப்பதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளியை சமூக முன்னேற்றத்தின் மையமாக மாற்றுகிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான திறன்களுடன் பிறந்தவர்கள் என்பதை உணர்ந்து, அவரவர் தனிப்பட்ட திறன்களை முதன்மைப்படுத்தி வளர்ப்பதே உண்மையான கல்வி, மாணவர்களை ஒருவருடன் ஒருவர் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.பெண் குழந்தை கல்வியின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் முன்னணியில் ஆசிரியர்களே உள்ளார்கள் என்றும், கல்வி பெற்ற பெண் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர்ந்து குடும்பத்தையும் சமூகத்தையும் உயர்த்துவாள் என்றும் அவர் தெரிவித்தார்.பெற்றோரின் தியாகங்களை மதித்து, அரசு பள்ளிகளை வலுப்படுத்தி, ஒவ்வொரு மாணவியின் தனிப்பட்ட திறன்களை மதித்து வளர்க்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே ஒரு வலிமையான, நியாயமான எதிர்காலத்தின் அடித்தளம் என்று அவர் பேசினார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் மு.பாலாஜி மாணவர்களுக்கான ஊக்க உரையில் இந்திய அரசியல் அமைப்பின் தனித்துவம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, பராக் ஒபாமா அவர்களின் மாணவப் பருவ வாழ்க்கையை எடுத்துக்காட்டாகக் கூறி, சமூகப் பொறுப்பு என்பது பதவி வந்தபின் உருவாகுவது அல்ல; அது சிறுவயதிலேயே மனதில் விதைக்கப்படும் உயரிய மதிப்பு என்று விளக்கினார்.பல நாடுகள், பல பண்பாடுகளுக்கு நடுவில் வளர்ந்த ஒபாமா, பிறரை மதிக்கும் பண்பு, வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு, நியாய உணர்வு ஆகியவற்றை சிறுவயதிலேயே வளர்த்துக் கொண்டது அவரை மக்களுக்காக உழைக்கும் தலைவராக உருவாக்கியதாக அவர் கூறினார்.நம்மால் முடிந்த சிறிய நன்மைகளே நாளைய பெரிய மாற்றங்களாக மாறும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்நிகழ்வில் குப்புசாமி, டாக்டர் நிர்மலா,ஜெயா கோழிப்பண்ணை ராஜா, முன்னாள் உதவி தலைமையாசிரியர் தங்கவேலு, மணிராஜ், மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர். டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர் ராமன் மற்றும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.ஆசிரியர்கள் சுதா மற்றும் ரம்யா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.விழாவின் நிறைவாக பள்ளியின் வேதியியல் ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.