சரக்கு வாகனம் மீது பள்ளி வேன் மோதியதில் 1-ம் வகுப்பு மாணவன் உள்பட 10 பேர் காயம்

தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை;

Update: 2025-07-05 04:25 GMT
சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 29). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 25 பேரை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையில் உள்ள துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்து கொண்டிருந்தார். திருச்சி விமான நிலையம் அருகே வந்தபோது முன்னால் சென்ற கார் திடீரென இடது பக்கம் உள்ள பல்பொருள் அங்காடிக்கு திரும்பியது. இதனால் செந்தில்குமார் திடீர் பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சரக்கு வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பள்ளி வாகனத்தில் வந்த 1-ம் வகுப்பு மாணவனுக்கும் காயம் ஏற்பட்டது. இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News