தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் தேர்வு*
மதுரை மாவட்டத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் (இடமிருந்து) தென்னவன், சாந்தி, ராஜேந்திரன், விஜயலெட்சுமி மற்றும் அருணாச்சலம்
மதுரை: தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்திலிருந்து 10 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் வழங்கப்படும் ‘அன்பாசிரியர்’ விருது பெற்ற மதுரை எல்கேபி நகர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.தென்னவன் ‘நல்லாசிரியர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் கல்விச்சேவையாற்றும் அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதிப்பிரிவு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது மதுரை மாவட்டத்திலிருந்து 10 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தின் தொடக்கக் கல்வித்துறையில் 4 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 10 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வான தொடக்க கல்வி இயக்ககத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் விவரம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷாபுரம் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.விஜயலெட்சுமி, கள்ளிக்குடி ஒன்றியம் கூடக்கோவில் நாச்சியப்ப நாடார் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செந்தில்வேல், மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.தென்னவன், கிழக்கு ஒன்றியம் மங்களக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.ராஜாத்தி ஆகியோர். ஆசிரியர்கள் பிரிட்டோ இனிகோ, ராஜாத்தி, மகேந்திர பாபு பள்ளிக்கல்வித் துறை சேர்ந்த ஆசிரியர்கள் விவரம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.சாந்தி, உசிலம்பட்டி ஒன்றியம் க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் க.ராஜேந்திரன், வடக்கு ஒன்றியம் ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் (பட்டதாரி கணித ஆசிரியர்) கு.பிரிட்டோ இனிகோ, கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பெ.நித்யாதேவி, மதுரை கிழக்கு ஒன்றியம் இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மு.மகேந்திரபாபு, மேலூர் ஒன்றியம் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந.அருணாசலம். . ஆசிரியர்கள் செந்தில்வேல் மற்றும் நித்யாதேவி இதுகுறித்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தலைமை ஆசிரியர் மு.தென்னவன் கூறுகையில், “கல்விச்சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பில் அன்பாசிரியர் விருது வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். அந்த வகையில் முதலாமாண்டு அன்பாசிரியர் விருதினை பெற்றேன். அவர்களது ஊக்கத்தால் தற்போது தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை எம் பள்ளி மாணவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். தமிழகத்தில் கல்விப்புரட்சி ஏற்படுத்தும் தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.