அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 கோடி திமிங்கிலத்தின் உமிழ் நீர்
பதுக்கி வைத்து விற்பனை- 5 பேர் கைது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கிலத்தின் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸ் என்ற அரிய பொருளை பதுக்கி வைத்து, சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக நாகை வன சரக அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வன சரக போலீசார் வேளாங்கண்ணியில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த, நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி (46), அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (41), பாண்டிச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ் (52), தஞ்சாவூரை சேர்ந்த தமிழரசன் (40), முத்துப்பேட்டையை சேர்ந்த கண்ணன் (38) ஆகிய 5 பேரை வன சரக போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 9 கிலோ திமிங்கிலத்தின் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸ் என்ற அரிய பொருளை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.10 கோடி. நாகை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் ரோமர் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.