தனியார் ஆலை புகையால் 10 கிராமங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்
விவசாயிகள் புகார்;

தஞ்சாவூர் அருகேயுள்ள தனியார் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் 10 கிராமங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வழக்குரைஞர் வெ. ஜீவகுமார் தலைமையில் ராமநாதபுரம், சக்கரசாமந்தம், சீராளூர், பள்ளியேறி, வடகால், வெண்ணலோடை, மரவனப்பத்து, எட்டாம் நம்பர் கரம்பை, ரெட்டிப்பாளையம், களிமேடு ஆகிய 10 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து அளித்த மனு: தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்திலுள்ள தார் தயாரிக்கும் தனியார் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் 10 கிராமங்களிலுள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், குழந்தைகள், பெரியவர்களுக்கு சுவாச கோளாறு, இருமல், தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் போன்றவற்றால் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகாரைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளிக்கப்பட்டாலும், தொடர்ந்து வெளியேறும் நச்சுப் புகை கிராமங்களுக்கும், வயல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மேலும் அதுபோன்ற மற்றொரு ஆலை தொடங்குவதற்கான பணி நடைபெறுகிறது. இதனால், சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உண்டாக்கும். கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், 3 கி.மீ. தொலைவிலுள்ள பெரியகோயிலையும் கரும்புகை சூழ்ந்து, அதன் பெருமையைச் சிதைக்கும். எனவே, மக்களையும், விளை நிலங்களையும் காப்பாற்றுவதற்காக இந்த ஆலைகளுக்கு நிரந்தர தடை விதித்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரக வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.