மலைக்கோட்டையில் ஏப்.10இல் தெப்பத் திருவிழா
திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் வரும் ஏப்.10 ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தெப்பம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.;
தெப்பத் திருவிழா நடைபெறும் பிரம்ம தீா்த்தம் என்ற சோம ரோகணி (தெப்பக்குளம்) கி.பி. 1ஆம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. திருக்குளத்தின் நீளம் 611 அடி, அகலம் 330 அடி. குளத்தின் நடுவில் உள்ள அழகிய நீராழி மண்டபம் கி.பி.16ஆம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய குளத்தில் நிகழாண்டு தெப்பத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தெப்பம் கட்டும் பணி தொடங்கியது. ஏப்.1 மாலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது.விழாவின் கொடியேற்றம் மற்றும் முதலாம் திருநாள் ஏப்.2 புதன்கிழமை நடைபெறுகிறது. காலை 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். அதன்படி ஏப்.3ஆம் தேதி கற்பக விருட்ச வாகனம், 4ஆம் தேதி பூதவாகனம், 5ஆம் தேதி கைலாச பா்வதம் வாகனம், 6ஆம் தேதி ரிஷப வாகனம், 7ஆம் தேதி யானை வாகனம், 8 ஆம் தேதி நந்திகேஸ்வரா், 9ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10ஆம் தேதி (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்திற்கு புறப்பட்டு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். தொடா்ச்சியாக இரவு 7 மணி முதல் சுவாமி, அம்பாள் 5 சுற்றுகளாக உலா வரும் நிகழ்வும் நடைபெறும். ஏப்.11ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்