தஞ்சை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்  தஞ்சாவூர், ஏப்.10 - 

சமையல் உதவியாளர்;

Update: 2025-04-10 16:32 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு  29.04.2025 மாலை 5.30 மணிவரை விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையயங்களில் காலியாக உள்ள 190 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டாரங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோருக்கு, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000 – 9000)) ஊதியம் வழங்கப்படும்.  இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பத்தாரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி –  குக்கிராமம் –  வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை). காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.04.2025.   விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னுரிமை சான்று இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Similar News