தஞ்சை மாவட்டத்தில், உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி வந்த 10 லாரிகள் பறிமுதல்

பறிமுதல்;

Update: 2025-04-10 16:34 GMT
தஞ்சை மாவட்டத்தில், உரிய அனுமதி இன்றி கனிமங்கள் ஏற்றி வந்த 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சீனிவாச ராவ் மேற்பார்வையில், புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் மாவட்டத்தில் தொடர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது உரிய நடைச்சீட்டு இன்றி கனிமங்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், திருவோணம் காவல் நிலையத்தில் 4 லாரிகள், தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் 2 லாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் 1 லாரி, செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 1 லாரி, வல்லம் காவல் நிலையத்தில் 2 லாரிகள் என மொத்தம் 10 லாரிகள் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.  மேலும், இதே போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4, மார்ச் மாதத்தில் 2 என மொத்தம் 6 லாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  "கனிமவளத்துறை சார்பில் தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், உரிய நடைச்சீட்டு இன்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

Similar News