சோழவித்தியாரத்தில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி
சிபிஎம் சார்பில் சாலை மறியல்;
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அதிகளவில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வருமானத்திற்கு பெரிதும் கைகொடுக்கக்கூடிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வீட்டுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கி தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வேண்டும். பால் கொள்முதல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் மற்றும் புதிய சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பாப்பாக்கோயில் - மேலப்பிடாகை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு,கட்சியின், ஒன்றிய குழு உறுப்பினர் டி.பழனிவேல் தலைமை வகித்தார். போராட்டத்திற்கு, கிளைச் செயலாளர்கள் இ.ராஜேந்திரன், எஸ்.அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி..வெங்கட்ராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் கோமதி தமிழ்ச்செல்வம் ஆகியோர் பேசினர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் என்.கவிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜவகர், எம்.ஹரிகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பிரேம்குமார், மண்டல துணை வட்டாட்சியர் எம்.ரமேஷ் மற்றும் கீழையூர் போலீஸார் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.