சேலம் மாநகர போலீஸில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் 10 பேர் இடமாற்றம்
கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார்;
சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா ஒரு நுண்ணறிவு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவரவர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் மற்றும் ரகசிய தகவல்களை சேகரித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில், மாநகர நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மாநகர மதுவிலக்கு பிரிவில் (நுண்ணறிவு) பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அழகாபுரம் நுண்ணறிவு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பள்ளப்பட்டி நுண்ணறிவு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்திற்கும், அஸ்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு, அம்மாப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காரிப்பட்டி நுண்ணறிவு பிரிவு ஏட்டு காவேரி, கன்னங்குறிச்சிக்கும், அம்மாப்பேட்டை ஏட்டு கண்ணன், காரிப்பட்டிக்கும், கொண்டலாம்பட்டி சுரேஷ் கருப்பூருக்கும், அங்கு பணியாற்றி வந்த ஏட்டு கார்த்திகேயன், கொண்டலாம்பட்டிக்கும் என மொத்தம் 10 பேர் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி பிறப்பித்துள்ளார்.