பெஞ்சல் புயலால் 100 ஹெக்டேர் நெற்பயிர்கள் அழுகியது

விவசாயிகள் கவலை;

Update: 2024-12-08 11:40 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பெஞ்சல் புயல் காரணமாக கனத்த மழை பெய்தது. இதனால் விவசாய விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதுடன் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் விளைநிலங்களில் தேங்கிய மழை தண்ணீர் வடிவதற்கு சில நாட்கள் ஆனது. குறிப்பாக சம்பா பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களில் ஒரு வாரத்திற்கு மேல் மழை தண்ணீர் தேங்கி நின்றதால் பயிரிட்டு சில நாட்களே ஆன பெரும்பாலான நெற்பயிர்கள் வேர் அழுகி காய்ந்து கருகி வருகிறது. இதனைப் பார்த்த விவசாயிகள் கவலையுடன் கண்ணீர் வடித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் பகுதியில் 100 ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் சம்பா நெல்பயிரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனத்த மழையின் காரணமாக விவசாய விளைநிலங்களில் தேங்கிய மழை நீரால் சம்பா நெற்பயிர்கள் பசுமையை இழந்து வேர் அழுகி நிலத்திலேயே சாய்ந்து கருகி வருகின்றது. இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகளோ வருவாய்த்துறை அதிகாரிகளோ எங்களது நிலங்களை வந்து பார்வையிடவில்லை. அதனால் தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News