வட்டமலை கரை அணையில் 10008 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு
வட்டமலை அணையில் நீர்வரத்து வேண்டி ஊர் மக்களும் விவசாயிகளும் 10008 அகல்விளக்கு ஏற்றி கார்த்திகை தீப வழிபாடு நடத்தி காண்போரை வியக்க வைத்தனர்.;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. அணை, 650 ஏக்கர் பரப்பளவில், 27 அடி உயரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம் சுற்றியுள்ள 30 கிராமங்களில் 6000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1980ல் கட்டப்பட்ட இந்த அணையில், 25 ஆண்டுகள் கடந்து, கடந்த 2021ல், தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதன் பின்னர் மீண்டும் தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது அதிகளவு மழை பெய்யும் போது மட்டுமே நீர்வரத்து வரும் நிலை உள்ளதால் இந்த அணையில் இந்த ஆண்டு நீர்வரத்து வேண்டி 6 ஆம் ஆண்டாக இலுப்பை எண்ணெய் ஊற்றி அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி உள்ளனர் தண்ணீர் திறந்து விடப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வருவதாகவும் இந்த அணையில் தண்ணீர் இல்லாததால் , ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்வதாகவும், விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை நீடிப்பதால், அமராவதி ஆற்று பாதையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டி வெறுமணே கிடக்கும் அணையை உயிர்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அணைக்கு தண்ணீர் கொண்டு வருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இந்த அணையை அரசியல் பிரமுகர்களும், கட்சி வேட்பாளர்களும் முன் வைக்கின்றனர் தேர்தல் முடிந்தவுடன் இப்படி ஒரு அணை இருப்பதையே மறந்துவிடுகின்றனர் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.