தஞ்சாவூரில் காரில் கடத்தப்பட்ட 103 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: மூவர் கைது
கிரைம்
தஞ்சாவூர் வழியாக புதுக்கோட்டை கடற்கரையில் இருந்து படகு மூலம், இலங்கை்கு கஞ்சாவை கடத்துவதற்காக, ஆந்திராவில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி வருவதாக, டி.ஐ.ஜி., ஜீயாகுல்ஹக், எஸ்.பி., ஆஷிஷ்ராவத் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், தஞ்சாவூர் டி.எஸ்.பி., சோமசுந்தரம் மேற்பார்வையில் போலீசார் நேற்று, தஞ்சாவூர் கரந்தை கோடியம்மன் கோவில் பகுதியில்,வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத மகேந்திரா டியூவி 300 என்ற காரை மறித்தனர். மேலும், காரில் வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பால் பாண்டி,40, மதுரை மாவட்டம் போத்தம்பட்டியை சேர்ந்த ரவிக்குமார்,28, புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்ளம் பகுதியை சேர்ந்த வீரப்பன்,26, ஆகியோரிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களின் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் பின் சீட்டிற்கு கீழ் ரகசிய அறை போன்று அமைத்து, அதில், கஞ்சா பெட்டலங்களை பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, பால்பாண்டி, ரவிக்குமார், வீரப்பன் ஆகிய மூவரையும் கைது செய்து, காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 20 லட்சம் ரூபாய், மதிப்பிலான 103 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மூன்று மொபைல்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.