வேலூர் பஞ்சமுக விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்.
வேலூர் பஞ்சமுக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம்.
பரமத்தி வேலூர்,செப்.6: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி காலை ஹேரம்ப மகா கணபதி யாகம், அபிஷேக ஆராதனைகள், மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை லட்சார்சனையும், 108 விக்னேஸ்வர பூஜையும் நடைபெற்றது. 4- ஆம் தேதி காலை மகா கணபதி யாகம், அபிஷேக ஆராதனைகள், லட்சார்ச்சனை மற்றும் தவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை காலை மகா கணபதி யாகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகமும், மகாதீபாராதனை மற்றும் திருவாசகம் முற்றோதலும் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை மகா கணபதி யாகம், பால்குட அபிஷேகம் மற்றும் திருமஞ்சன அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை காலை சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹேரம்ப மகா கணபதி யாகம், சிறப்பு அலங்காரம், தனபூஜை, சுமங்கலி பூஜை, தீப பூஜை, மகா ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5- மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர், பேட்டை, பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயில் நிர்வாகிகள், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், வேலூர் மகளிர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.