மூலனூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் கொண்டுவரப்படுமா?

மூலனூரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் கொண்டு வரப்படுமா? உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்;

Update: 2025-05-22 04:37 GMT
மூலனூர் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள், 2பேரூராட்சிகளில் 1லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மூலனூர் அரசு மருத்துவமனை மற்றும் கன்னிவாடி அரசு மருத்துவமனை இந்த இரண்டு மருத்துவ மனைகளின் தரமான மருத்துவ சேவைகளால் மூலனூர் வட்டார மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். மூலனூரை மையப்ப டுத்தி நான்கு பக்கமும் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் சுற்றளவில் படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனைகள் எதுவும் இல்லாததால், இங்கு வாழும் விளிம்பு நிலை மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு இந்த இரண்டு அரசு மருத்துவ மனைகளையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை சிறப்பாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. கிராமங்களில் வயதானோர்கள் மட்டுமே அதிகம் இருந்து வரும் நிலையில் எதிர்பாராத மருத்துவ தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாததால் உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் இப்பகுதியில் ஏற்படும் சாலைவிபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு செய்யவேண்டிய முதலுதவிகளுக்கு வழியின்றி காலதாமதம் ஏற்படுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Similar News