லாரியில் இருந்து சாலையில் சரிந்த 15 டன் இரும்பு தகடுகளால் நெரிசல்
ஒரகடத்தில் லாரியின் கயிறு அறுந்ததால், 15 டன் இரும்பு தகடுகள் சாலையில் சரிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.;
அம்பத்துாரில் இருந்து, 27 டன் இரும்பு தகடுகளை ஏற்றிய லாரி ஒன்று, காலை, ஒரகடத்தில் உள்ள 'லிப்ட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு சென்றது.வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே, கிருஷ்ணா கல்லுாரி எதிரே உள்ள வாகன எடை மேடையில், எடை கணக்கீடு செய்து கொண்டு, கீழே இறங்கிய போது, லாரி மற்றும் இரும்பு தகடுகள் மீது கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்தது. இதனால், லாரியில் இருந்த 15 டன் இரும்பு தகடுகள், மளமளவென சரிந்து சாலையில் விழுந்தன. சாலை முழுதும் இரும்பு தகடுகள் விழுந்ததால், வாகன நெரிசல் ஏற்பட்டது. ஒரகடம் போலீசார், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, சாலையில் சரிந்து விழுந்த இரும்பு தகடுகளை அகற்றினர்.