தஞ்சாவூர் மக்கள் நேர்காணல் முகாமில், ரூ. 1.55 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள் ;

தஞ்சாவூர் வட்டம், நாஞ்சிக்கோட்டை சரகம் மருங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 293 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 55 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சரகம் மருங்குளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் முன்னிலையிலும், மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், விதவைப் பெண்கள் ஓய்வூதியம் ரூ.5,96,750 மதிப்பில் 40 பயனாளிகளுக்கும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனைத்துவித விவசாய பயன்பாட்டுப் பொருள்கள் ரூ.10,050 மதிப்பில் 6 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அனைத்து வித விவசாயப் பயன்பாட்டு பொருள்கள் ரூ.34,939 மதிப்பில் 3 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் இணைப்பு ரூ.52,00,000 மதிப்பில் 11 குழுக்களுக்கும், CIF - சமுதாய முதலீட்டு நிதி ரூ.8,00,000 மதிப்பில் 140 பயனாளிகளுக்கும், வருவாய்த் துறை சார்பில் முதலமைச்சரின் விபத்து நிவாரணம் ரூ.83,50,000 மதிப்பில் 86 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் Uiegp-2, Aabcf-1 ரூ.6,00,000 மதிப்பில் 3 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் ரூ.1,55,91,739 மதிப்பில் 293 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இவ்விழாவில் ஆட்சியர் பேசியதாவது, "பொதுமக்கள் தமிழக அரசின் அனைத்து துறைகளின் திட்ட விபரங்களை அறிந்து கொள்வதற்கு இதுபோன்ற முகாம்கள் பயன்படுகிறது. அனைத்து துறை அலுவலர்கள் துறை சார்ந்த திட்ட விவரங்களை விளக்குவதற்கும், இம்முகாமில் தரப்படுகிற கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீர்வு காண்பதன் வாயிலாக திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளமுடிகிறது. பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை போன்ற அனைத்து துறை திட்டப் பணிகள் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக உள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதில் அனைவரும் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய அட்டை பெற அனைத்து தொழிலாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ராமச்சந்திரன், தஞ்சாவூர் துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவுடைச் செல்வன், அருளானந்தசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர், வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா, வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.