மினி லாரி-சுற்றுலா வேன் மோதல்: 16 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே மினி லாரியும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.;
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 58). இவரும், உறவினர்கள, நண்பர்கள் 19 பேருடன் சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு வந்தனர். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரத்தை கடந்து வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிக்காக தூத்துக்குடி- மதுரை மார்க்கமான சாலை அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மதுரை-தூத்துக்குடி மார்க்கமான ஒரு வழிசாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டிருந்தன. இதனால் ராஜசேகர் மற்றும் அவரது உறவினர்கள் பயணித்த சுற்றுலா வேன் எட்டயபுரத்தை கடந்து அந்த ஒரு வழி பாதையில் சென்று கொண்டிருந்தது. கீழஈரால் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்த மினி லாரி வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக சுற்றுலா வேனும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் மினி லாரியும், சுற்றுலா வேனும் பலத்த சேதமைடந்தன. மேலும், மினி லாரி டிரைவரான கோவில்பட்டி மந்தித்தோப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (48), வேனில் பயணித்த ராஜசேகர், கொடேரி, செந்தில்குமார், பாலாஜி, சித்தையன், நந்தகுமார், சின்னப்பொண்ணு, தனபால், பூங்கொடி, இந்திராணி, ஜோதிலட்சுமி, மோகன் ராம், பழனியம்மாள், மாரியம்மாள், சத்யா உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீசார் காயம்பட்டவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் பணிகளை மேற்கொள்ளும் போது முறையான அறிவிப்பு பலகைகளும், எதிர் திசையில் திருப்பி விடப்படும் போது நடுவே தடுப்பு கம்பிகளும் அமைத்தால் இது போன்ற விபத்துகளை தடுக்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் மராமத்து பணிகளை மேற்கொள்ளும்போது முறையான அறிவிப்பு பலகை மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.