போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 197 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து
ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தகவல்;
சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மனித உயிர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட வேகம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும். தொடர் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் (பிப்ரவரி) மட்டும் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 208 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. 197 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் துணை கமிஷனர்கள் சிவராமன், வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.