கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு: கோவில்பட்டி அருகே சோகம்

Update: 2024-08-27 02:58 GMT
கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஆகாஷ் (14), இலுப்பையூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். பூசாரிபட்டியை சேர்ந்த அந்தோணி மகன் சாமுவேல் என்ற ஜான் (12), ராயல் மில் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவர்கள் இருவரும் இன்று காலை கூசாலிபட்டியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் (பொ)பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டிஎஸ்பி வெங்கடேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சரும்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ நேரில் சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News