ஆடு வியாபாரி வெட்டிக் கொலை: 2பேர் கைது!

ஆழ்வார்திருநகரி அருகே ஆடு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2பேரை போலீசார கைது செய்துள்ளனர்.

Update: 2024-09-03 03:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சுடலை (55). இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சுடலை 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வந்தார். ஆடுகளை ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமான்குளம் வயல்வெளியில் பட்டி அமைத்து வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை பராமரிப்பதற்காக மணிகண்டன் என்பவரை வேலைக்கு வைத்து இருந்தார். ஆனால், அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 30-ந் தேதி இரவில் சுடலை தேமான்குளத்திற்கு சென்று, பட்டியில் ஆடுகளை அடைத்தார். பின்னர் அங்குள்ள வயலில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென்று அரிவாளால் சுடலையை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கட்டிலிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுடலை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியில் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலை சம்பவம் தொடர்பாக நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியை சேர்ந்த பேச்சிமுத்து (55) மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று பேச்சிமுத்து, அதே பகுதியை சேர்ந்த பூல்பாண்டி மகன் சரவணக்குமார் (30) ஆகிய இருவரையும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் ஸ்டெலாபாய் கைது செய்தார். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News