ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது
அணை நீர்மட்டம் 60.50 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 880 கனடியாக இருந்தது
ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது..பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் செப்.,15ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் மதுரை மாவட்டத்தில் 98 ஆயிரத்து 764 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போகத்திற்கு செப்.,14 ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை வினாடிக்கு 900 கன அடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு மொத்தம் 2030 கன அடி நீர் வெளியேறுகிறது. மதுரை, தேனி ஆண்டிபட்டி- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 60.50 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 880 கனடியாக இருந்தது.