பணம் கையாடல் செய்த 2 பேருக்கு தண்டனை உறுதி செய்ய நீதிமன்றம்.
பணம் கையாடல் செய்த 2 பேருக்கு தண்டனை உறுதி செய்ய நீதிமன்றம்.;
வளசரவாக்கம் மின் வாரிய அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மின் கணக்கீட்டு ஆய்வாளராக கணபதி, மின் கணக்கீட்டாளராக சிவபிரகாசம், வருவாய் மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது ஆகியோர் பணியாற்றினர். இவர்கள், கடந்த 2003-ல், நுகர்வோரிடம் இருந்து, மின் வாரியத்துக்கு பெறப்பட்ட, 28.50 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி ஆவண தடுப்பு பிரிவில், மின் வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி ஜே.எம்., - 1 நீதிமன்றத்தில், இந்த வழக்கு நடந்தது. சிவபிரகாசம் உயிரிழந்ததால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். கணபதி, சாகுல்ஹமீது மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார். பூந்தமல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - 2ல், குற்றவாளிகள் தரப்பில், விடுதலை செய்யக்கோரி, 24 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, 24 மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து, குற்றவாளிகளை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்தார்.