பரமத்தி அருகே கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சாவு. 6 பேர் படுகாயம்.
பரமத்தி அருகே கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சாவு. 6 பேர் படுகாயம் அடைந்தனர்.;
பரமத்திவேலூர்,ஜூன். 9: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரிஷப்,ரூபாலிஜல்காவு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரலுங்கர்,ரமேஷ் பர்மா, லீலா,விக்ரம்(50),பெலிட்டிநன் (13), தர்ஜெயன்(8) ஆகிய 8 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் குஜராத்துக்கு செல்ல காரில் கரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையின் இடது பக்கத்தில் இருந்த ஒரு மரத்துக்கு அடியில் நேற்று மாலை காரை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை ஏற்றுவதற்காக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த காரின் பின் பகுதியில் மோதி காரின் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் காரின் வெளியே நின்று கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரிஷப் மற்றும் ரூபாலி ஜல்காவு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கண்டெய்னர் லாரி மோதியதில் கார் அருகில் உள்ள சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் கண்டெய்னர் லாரியும் அந்த காரின் மீது விழுந்து கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காருக்குள் இருந்த 2 பேர் இடிபாடுகளுக்குள் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை தீயணைப்புத்துறையினர், பரமத்தி போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து நீண்டநேர போராட்டத்துக்கு இடையே கிரேன் மற்றும் ஜே.சி.பி. வாகனங்களை கொண்டு அவர்களை உயிருடன் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த 8 பேரில் 2 பேர் பலியான நிலையில் மீதமுள்ள 6 பேர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் கேரளா மாநிலம், எர்ணாகுளம், சாணிபரம்பில் பகுதியை சேர்ந்த நிதீஷ் (33) என்ப கைது செய்து கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.