ஆரணி அருகே கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் குழந்தை பலி. 20 பேர் காயம்

ஆரணி, ஆக.26. ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்திலிருந்து பாண்டிச்சேரி கோயிலுக்கு சென்ற வேன் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 8 மாத குழந்தை இறந்தது. மேலும் வேனில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2024-08-26 15:32 GMT
ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முரளி என்பவர் மாதாந்தோறும் அஷ்டமி தினத்தில் புதுச்சேரியில் உள்ள மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள பிரத்தியங்கிரா அம்மன் கோவிலில் இரவு 12 மணிக்கு நடைபெறும் பூஜைக்காக 20க்கும் மேற்பட்டவரை சுற்றுலா போல அழைத்துச் செல்வார் . அதன்படி திங்கள்கிழமை அஷ்டமி முன்னிட்டு பிற்பகலில் ஆரணி சபாஷ் கான் தெருவை சேர்ந்த நடராஜன் அவரது மனைவி அமுதவல்லி ,ஹேமேஸ்வரன் 8 மாத குழந்தை , மூத்த மகள் ஆஷிகா மற்றும் நடராஜனின் சகோதரர் பாபு அவரது மனைவி தமிழ்ச்செல்வி, சிவசக்தி நகர் பகுதி சேர்ந்த பேபி , முத்துகிருஷ்ணன் மனைவி செல்வி. ஹரிகிருஷ்ணன் மனைவி செல்வி, சித்ரா , செல்வராஜ் மகன் நவீன் (7) ,தீனதயாளன் மனைவி மகேஸ்வரி ,முருகன் மனைவி விஜயலட்சுமி ,பெருமாள் மனைவி லட்சுமி, கோடீஸ்வரன் மனைவி சாந்தி ,அன்பழகன் மனைவி சாந்தி உள்பட 26 பேர் வேனில் மொரட்டாண்டிக்கு பயணம் செய்துள்ளனர். வேன் ஆரணி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ணமங்கலம் அருகே செல்லும்போது வேனின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் பக்கவாட்டில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனுக்குள் சிக்கிக் கொண்டவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உயிருடன் மீட்டனர். அதில் நடராஜன் மகன் ஹேமேஸ்வரன் (8 மாத குழந்தை) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .அங்கு போதிய மருத்துவ வசதியும் இல்லாத நேரத்திலும் அவர்களை முதலுதவிகள் வழங்கப்பட்டு இதில் நவீன் உள்பட 5 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று சென்றனர். விபத்து குறித்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணி கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து இறந்த ஹேமேஸ்வரன் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது .

Similar News