வங்கி ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை!

சாத்தான்குளம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் புகுந்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-09-26 04:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வசவப்பநேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் பொன்னுலிங்கம் (37). இவர் நாகர்கோவிலில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி ராமலட்சுமி, மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் ராமலட்சுமி, அவரது மகன்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ராமலட்சுமி, அவரது குழந்தைகள் வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். கதவை மூடாமல் வீட்டில் தூங்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் 1 மணி அளவில் எழுந்து பார்த்தபோது வீட்டு அறை கதவு மற்றும் பெட்ரூம் கதவு திறந்து கிடந்துள்ளது. பின்னர் பீரோவில் பார்த்தபோது அங்கு வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதனையடுத்து ராமலட்சுமி அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தையடுத்து பொன்னுலிங்கம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News