தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில் வேம்புக்குடியில் ஜன.20 முதல் சுங்கக் கட்டணம் வசூல்

சுங்கச்சாவடி

Update: 2025-01-14 11:18 GMT
தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலையில் பாபநாசம் அருகேயுள்ள வேம்புக்குடியில் ஜன 20-ம் தேதியனறோ அல்லது அதற்குப் பிறகோ கங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர- விக்கிரவாண்டி இடையே 184.28 கி.மீ. தொலைவுக்கு புதிய புறவழிச் சாலை (என்.எச்.45சி) அமைக்கும் பணி 2018-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டம் கும்பகோணம் தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, தஞ்சாவூர்- சோழபுரம் இடையேயான 47.84 கி.மீ., சோழபுரம்- சேத்தியாதோப்பு இடையேயான 50.48 கி.மீ. ஆகிய 2 தொகுப்பு பணிகள் படேல் நிறுவனத்துக்கும், சேத்தியாதோப்பு விக்கிரவாண்டி இடையேயான 65.96 கி.மீ. தொகுப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டன. படேல் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த 2 தொகுப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த பணிகள் 45 சதவீதம் முடிந்த நிலையில், அதன்பிறகு பணியைத் தொடரவில்லை. இதனால், இந்த ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. தஞ்சாவூர் சோழபுரம் இடையே சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் அருகே வேம்புக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஜன.20-ம் தேதிக்கு பிறகு செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2024- 2025-ம் ஆண்டுக்கு மாதாந்திர கட்டண பாஸ் (ரூ.340) தேவைப்படுவோர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அணுகலாம் எனவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி திட்ட இயக்குநர் செல்வகுமார் கூறியது: தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலையில் தற்போது தஞ்சாவூர்- சோழபுரம் இடையே பணிகள் முழுமையாக நிறைவடைந்து, வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் அருகே வேம்புக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் ஜன.20-ம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Similar News