சேலம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள்
பங்குனி மாத பௌர்ணமி முன்னிட்டு;
பங்குனி மாத பௌர்ணமி முன்னிட்டு சேலம், ஓசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் பெரும்பாலும் சென்னை, வேலூர், திருத்தணி, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஒசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. நாளை பங்குனி மாத பௌர்ணமி முன்னிட்டு இன்று 11 ந்தேதி முதல் 12-ம் தேதி இரவு வரை பயணிகளின் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூர் ஆகிய பகுதியிலிருந்து 200 சிறப்பு பசுக்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக பங்குனி பௌர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு நாளை அதிகாலை ஒரு மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு செய்யப்படுவதாக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்தார்.