பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிடக் கோரிய பாஜக மனு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

பொங்கல் தொகுப்போடு ரூ.2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2025-01-10 17:07 GMT
சென்னை உயர் நீதிமன்றத்தில், பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பாக வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது உடைமைகளையும் பொருளாதாரத்தையும் இழந்து, விவசாய பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய சோகத்தில் உள்ளனர். எனவே, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, கடந்த ஆண்டை போல, தமிழக அரசு இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ ராம் அமர்வில், இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வரவுள்ளதால், வழக்கை அவசர வழக்காக விசாரித்து, தகுந்த நிவாரணம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும், வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்று முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஸ்ரீராம், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே நிராகரித்த பிறகும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கூறுவதை ஏற்க முடியாது. இது போல, தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டால், மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும். இந்த பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றுகூறி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

Similar News